ஜூன் 13ல் மம்மூட்டியின் டர்போ வெளியாகிறது
20.04.2024 07:20:00
திருவனந்தபுரம்: மலையாளத்தில் மம்மூட்டி நடித்துள்ள ‘டர்போ’ என்ற படம், வரும் ஜூன் 13ம் தேதி திரைக்கு வருவதை படக்குழு உறுதி செய்துள்ளது. ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ என்ற படம், கடந்த பிப்ரவரியில் திரைக்கு வந்து வெற்றிபெற்றது. பிறகு ஓடிடியிலும் வெளியானது. இதையடுத்து மம்மூட்டி நடித்துள்ள படம், ‘டர்போ’. ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இதை வைசாக் இயக்கியுள்ளார்.
ஏற்கனவே அவரது இயக்கத்தில் ‘போக்கிரி ராஜா’, ‘மதுர ராஜா’ ஆகிய படங்களில் மம்மூட்டி நடித்திருந்தார். ‘டர்போ’ படத்தில் மம்மூட்டியுடன் கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி, தெலுங்கு நடிகர் சுனில், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளனர். மம்மூட்டியின் வேஃபேரர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்ய, கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார்.