தற்கொலை படை தாக்குதல் பாக்கிஸ்தானில் 4 வீரர்கள் பலி
பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் நான்கு பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். இதனால் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த தலிபானால் பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதி ஒருவர், நேற்று தன் மீது பொருத்தியிருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினார். குவெட்டா நகரின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாதுகாப்பு படையினரின் சோதனைச் சாவடிக்கு அருகே இந்த தாக்குதல் நடந்தது. இந்த கொடூரமான தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் நான்கு பேர் மரணமடைந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக் - இ - தலிபான் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.