கோடை விடுமுறையில் வெளியாகும் சூரியின் 'கருடன்' !
'விடுதலை -பாகம் 1' படத்தின் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் சூரி மீண்டும் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கருடன்' எனும் திரைப்படம், இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேகப் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கருடன்' எனும் திரைப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி, ரேவதி ஷர்மா, ஷிவதா, ரோஷினி ஹரிப்பிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, துஷ்யந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வெற்றிமாறன் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மற்றும் பைவ் ஸ்டார் செந்தில் ஆகியோர் வழங்குகிறார்கள்.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைபடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் சூரியின் 'கருடன்' திரைப்படம் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
சூரி - வெற்றிமாறன் கூட்டணியுடன் சசிகுமார்- உன்னி முகுந்தன் ஆகியோரும் இணைந்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கும் திரையுலக ரசிகர்களிடையையும், வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.