பிரித்தானியாவில் ரேடான் வாயு அதிகரிப்பால் சிறைக் கைதிகள் வெளியேற்றம்!
பிரித்தானியாவின் டெவான்(Devon) பகுதியில் உள்ள HMP Dartmoor சிறைச்சாலையில் ரேடான் என்ற நிறமற்ற, மணமற்ற கதிரியக்க வாயுவின் அளவு(radioactive gas) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து கைதிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருதி, 184 சிறைகள் மூடப்பட்டுள்ளதுடன், சுமார் 200 கைதிகள் தற்காலிகமாக வேறு சிறைகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
ரேடான்(radon) வாயுவின் அளவை நிரந்தரமாக குறைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதனால் இந்த இடமாற்றங்கள் தற்காலிகமானவை என சிறைச்சாலை துறை உறுதியளித்துள்ளது.
மேலும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், கைதிகள் மீண்டும் அந்த சிறைச்சாலைகளுக்கு திரும்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரேடான் என்பது பாறைகள் மற்றும் மண்ணில் உள்ள யுரேனியம் சிதைவதால், இயற்கையாக உருவாகும் வாயு என குறிப்பிடப்படுகின்றது.
இது குறைந்த அளவு வெளிப்பாடு, பொதுவாக பெரிய ஆரோக்கிய அபாயத்தை ஏற்படுத்தாது. ஆனால் அதிகரித்த அளவிற்கு மத்தியில் நீண்ட நேரம் இருப்பது நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.