சவுதி-கட்டார் இடையில் நேரடி விமான சேவைகள்..!
கட்டார் எயார்வேஸ் மற்றும் சவுதி எயார்லைன்ஸ் ஆகியவை டோஹா மற்றும் ரியாத்துக்கு இடையேயான விமான சேவைகளை நாளை திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூன்று வருட முரண்பாடுகளை அடுத்து அரசியல் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான்வெளியை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டுவிட்டர் தளத்தின் மூலம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ள கட்டார் எயார்வேஸ், திங்கள் முதல் ரியாத்திற்கும், 14 முதல் ஜெட்டாவிற்கும், ஜனவரி 16 முதல் தம்மமிற்கும் இடையில் விமான சேவைகள் இடமபெரும் என குறிப்பிட்டுள்ளது.
போயிங் 777-300, போயிங் 787-8 மற்றும் எயார்பஸ் ஏ 350 உள்ளிட்ட விமானங்கள் இதற்கான சேவைகளில் ஈடுபடும் என்றும் கட்டார் எயார்வேஸ் அறிவித்துள்ளது.
இதேவேளை ரியாத் மற்றும் ஜெட்டாவிலிருந்து டோஹாவுக்கு திங்கட்கிழமை முதல் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக சவுதி எயார்லைன்ஸ் டுவீட் செய்துள்ளது.
2017 நடுப்பகுதியில் கட்டார் மீது பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இராஜதந்திர, வர்த்தக பயணத் தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.