உலக நாடுகள் இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியை உற்று பார்க்கின்றன

26.11.2022 11:00:28

உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் இந்தியாவின் மீது உள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.


மராட்டிய மாநிலம் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்போது பரபரப்புடன் பேசப்பட்டது. இந்த நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதலின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதேபோன்று நாட்டில், அரசியல் சாசன தினமும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன தின கொண்டாட்டங்கள் இன்று நடந்தன. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவில் அரசியல் சாசன தினத்துடன், மும்பை பயங்கரவாத தாக்குதலின் ஆண்டு தினமும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

14 ஆண்டுகளுக்கு முன்பு, அரசியல் அமைப்பை மற்றும் குடிமக்களின் உரிமைகளை இந்தியா கொண்டாடி கொண்டிருந்தபோது, மனிதகுல எதிரிகள் இந்தியாவில் மிக பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் உயிரிழந்தோருக்கு எனது அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன். இன்றைய சர்வதேச சூழலில், ஒட்டு மொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் மீது உள்ளது.

இந்தியாவின் அதிவிரைவான வளர்ச்சி, அதன் விரைவான வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் வலுப்படுத்தி வரும் உலகளாவிய தோற்றம், ஆகியவற்றின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் உலகம் நம்மை பார்த்து கொண்டிருக்கிறது. இந்தியாவை நோக்கி புது வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அனைத்து தடைகளையும் கடந்து, அது முன்னோக்கி நடைபோடுகிறது. இன்னும் ஒரு வாரத்தில், ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவுக்கு கிடைக்க பெறும். அது மிக பெரியது. உலகத்தின் முன்னால் நாட்டின் கவுரவம் மேம்பட நாம் அனைவரும் ஓரணியாக செயல்படுவதுடன், ஒருங்கிணைந்து பங்காற்றி அதன் பயனை அவர்களின் முன்னால் கொண்டு வரவேண்டும். அது நம்முடைய கூட்டான பணி ஆகும் என பேசியுள்ளார்.