கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல்
ரஷ்யாவிலிருந்து இந்தியா நோக்கி சென்ற எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இந்தத் தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
மேலும், காசா மீதான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக வும், செங்கடல் வழியாக செல் லும் வணிகக் கப்பல்களைக் குறி வைத்து ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடல் பகுதியில் செல்லும் பல நாட்டு கப்பல்கள் மீது ட்ரோன்கள் மூலம் குண்டு வீசியும் ஏவுகணை வீசியும் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில் நேற்று செங்கடல் வழியாக ரஷ்யாவிலிருந்து இந்தியா நோக்கி சென்ற எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்றபெயருடைய இந்தக் கப்பல் ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க் பகுதியிலிருந்து புறப்பட்டுள்ளது. செங்கடல் பகுதியில் இந்த எண்ணெய்க் கப்பல் வந்தபோது தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுதி படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் கப்பலில் மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஹவுதி படையினரும் உறுதி செய்துள்ளனர். பனாமா கொடியுடன் வந்துகொண்டிருந்த இந்தக் கப்பல் பிரிட்டன் நாட்டுக்குச் சொந்தமானது என்று ஹவுதி செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா தெரிவித்துள்ளார். ஆனால் அண்மையில்தான் இந்த கப்பலை பிரிட்டன் விற்பனை செய்ததாகவும், தற்போது அதன் உரிமையாளர் சீஷெல்ஸில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய்க் கப்பல் இப்போது ரஷ்யாவுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த கப்பல் ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க்கில் இருந்து இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள வாடினாருக்கு சென்றபோதுதான் இந்த தாக்குதலை ஹவுதி படை நடத்தியுள்ளது. இந்த மோசமான தாக்குதலில் கப்பலில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை