12 நாடுகள் மீது ட்ரம்ப் பயணத் தடை!

05.06.2025 09:01:40

இஸ்ரேல் ஆதரவு குழு மீதான கொலராடோ தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (04) தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கொள் காட்டி 12 நாடுகளுக்கு பயணத்தைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

ட்ரம்பின் பிரகடனம் ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது.

 

தனது சமூக ஊடக தளமான ட்ரூத் தளத்தில் குடியேறிகள் மீதான கடுமையான அடக்குமுறையை அறித்த அதே வேளையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த கொலராடோ தாக்குதலை ட்ரம்ப் கடுமையாக கண்டித்தார்.

அந்த தாக்குதலில் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை விடுவிக்கக் கோரிய அமைதியான போராட்டக்காரர்கள் மீது எகிப்திய நபர் ஒருவர் Molotov cocktail குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியிருந்தார்.

மொஹமட் சப்ரி சோலிமான் என அடையாளம் காணப்பட்ட தாக்குதல்தாரி, கூட்டத்தைத் தாக்கும் போது “பாலஸ்தீனத்தை விடுவிப்போம்” என்று கூச்சலிட்டு இந்த தாக்குதலை நடத்தியிருந்தார்.

 

இதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர்.

அந் நாட்டு நேரப்படி திங்கட்கிழமை (ஜூன் 9) அதிகாலை 12:01 மணிக்கு அமலுக்கு வரும் இந்தத் தடையைத் தவிர, புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கும் பகுதி நுழைவு கட்டுப்பாடுகள் இருக்கும்.

குறிப்பாக அதிக விசா காலாவதி விகிதங்கள் அல்லது அமெரிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் போதுமான ஒத்துழைப்பு இல்லாததால், B-1, B-2, F, M மற்றும் J பிரிவுகள் போன்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்கள் இரண்டிலும் கட்டுப்பாடுகள் இதில் அடங்கும்.

 

தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, ஏழு இஸ்லாமிய நாடுகள் மீதான சர்ச்சைக்குரிய பயணத் தடைக் கொள்கையை மீண்டும் உயிர்ப்பித்து விரிவுபடுத்துகிறது.

இது முதன்முதலில் அவரது முதல் பதவிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் உள்ளிட்ட ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தடைசெய்து 2017 ஜனவரியில் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார்.

 

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் 2021 இல் அந்தக் கொள்கையை இரத்து செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related