புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்!

21.09.2025 11:15:09

கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இந்தியா-கனடா இருநாட்டு உறவுகள், தற்போது புதிய கட்டத்திற்கு நகரும் முயற்சியில் உள்ளன. கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 18) இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் (Ajit Doval) மற்றும் கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாதலி ட்ரூயின் (Nathalie Drouin) ஆகியோர் புதுடில்லியில் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

2023-ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் விரிசலுக்குப் பிறகு, இரு நாடுகளும் மீண்டும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

இரு தரப்பும் பயங்கரவாதம், சர்வதேச குற்றங்கள் மற்றும் உளவுத்துறை பரிமாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டன.

இந்த சந்திப்புக்கு முன்னதாக, ஜூன் மாதத்தில் G7 உச்சி மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சந்தித்து, உறவுகளை மீட்டமைக்க நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர்.

தற்போது, இரு நாடுகளும் தங்களது தூதர்களை மீண்டும் நியமித்துள்ளன.

"இரு தரப்பும் அரசியல் தலைமை மட்டத்தில் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க உறுதியுடன் செயல்படுகின்றன" என இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால ஒத்துழைப்புக்கான முக்கிய பிரிவுகள் மற்றும் பிராந்திய, உலகளாவிய நிலவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.