ராஜபக்ச குடும்பத்திற்கு குறிசொல்பவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள் !

22.05.2022 16:14:41

ராஜபக்ச சகோதரர்கள் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு மூல காரணம் என விமர்சிக்கப்படும், ராஜபக்ச குடும்பத்திற்கு குறிசொல்பவரான அனுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் வசிக்கும் ஞானா அக்கா என அழைக்கப்படும் ஞானவதி ஜயசூரிய தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

தான் நாட்டை ஆட்சி செய்வது குறித்து கோட்டாபய ராஜபக்சவிற்கு அறிவுறுத்தல்களை வழங்கவில்லை என ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது கடந்த 09 ஆம் திகதி ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில், ராஜபக்சவின் விசுவாசிகள் மற்றும் அவர்களின் உடமைகள் மீது கோட்டா கோ ஹோம் ஆதரவாளர்கள் எதிர் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது ராஜபக்ச குடும்பத்திற்கு குறி சொல்பவர் என அடையாளப்படுத்தப்படும் ஞானா அக்காவின் வீடும் சேதமாக்கப்பட்டதுடன் தீயும் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஞானா அக்கா இந்த விடயம் தொடர்பில் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு உருக்கமாக செவ்வியை வழங்கியுள்ளார்.

அரசியல் மற்றும் இராணுவ அனுசரணையின் அடிப்படையில் எனக்கு பிரதிபலன்கள் கிடைத்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல.

நான் உருவாக்கிய அனைத்தும் நான் வியர்வை சிந்தி சம்பாதித்தவை. தற்போது அவை கொள்ளையிடப்பட்டு தீயில் அழிக்கப்பட்டுள்ளன.

அரச தலைவரின் குடும்பத்தினர் எனது ஆலய வளவை சுத்தம் செய்வதாகவும் அரச தலைவரை நான் நீராட்டுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகளை மறுக்கின்றேன்.

நான் தெய்வமில்லை. மன ரீதியான சக்தி தெய்வத்திற்கு வருகிறதே அன்றி எனக்கு அல்ல. தெய்வத்தின் அறையில் இருக்கும் போது எனக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் பின்னர் எனக்கு நினைவில் இருப்பதில்லை.

நான் நாட்டை ஆட்சி செய்வது குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவில்லை. ஞானதிருஷ்டியில் எனக்குள் இருக்கும் சக்தி அரச தலைவருடன் என்ன கூறியிருக்கும் என்பது எனக்கு தெரியாது என அவர் கூறுகின்றார்.