மோகா துறைமுக நகரை கைப்பற்றிய ஹூதி படையினர்.

11.09.2026 08:23:59

செங்கடல் துறைமுக நகரான மோகாவை ஹூதி கிளர்ச்சியாளர்கள் படை கைப்பற்றியுள்ளனர். ஏமனின் தென்மேற்கு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி(Houthi) கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும் சவுதி ஆதரவு பெற்ற அரசு படையினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. ஒரு வார கால மோதலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

   

இந்நிலையில் இந்த மோதலின் முக்கிய திருப்புமுனையாக ஹூதி படையினர் செங்கடலில் உள்ள துறைமுக நகரான மோகாவை(Mokha) கைப்பற்றியுள்ளனர்.

மோகா துறைமுகம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் கடல்வழி வர்த்தக பாதையின் தெற்கு நுழைவு வாயிலான பாப் அல்-மந்தப் ஜலசந்தியில் இருந்து ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி படையினர் வெறும் 46 மைல்கள் தொலைவில் மட்டுமே உள்ளனர்.

இதற்கிடையில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு எந்தவொரு தடையையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை என்று ஹூதி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான கப்பல்களை குறிவைத்து தாக்கும் நடவடிக்கை தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை அடுத்து, எண்ணெய் ஏற்றுமதிக்கு சவுதி அரேபியா பெருமளவு செங்கடல் வழியை நம்பியிருந்தது.

ஆனால் தற்போது செங்கடலில் உள்ள முக்கிய துறைமுகமான மோகா ஹூதி படையினரிடம் வீழ்ந்துள்ளது. இதனால் சர்வதேச எண்ணெய் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது.