குழந்தைகளுக்கான மகிழ்ச்சியற்ற நாடாக பிரித்தானியா தெரிவு!

30.09.2024 08:08:32

குழந்தைகளுக்கான மகிழ்ச்சியற்ற நாடாக பிரித்தானியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகின் செழிப்பான பகுதியாகக் கருதப்படும் ஐரோப்பாவில், இளைஞர்கள் மனநலக் குறைபாடுகள் மற்றும் வாழ்க்கை திருப்தியின்மையை அதிகமாக அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக, பிரித்தானியா (UK) சிறுவர் நலனில் ஐரோப்பாவில் மிகக் குறைந்த இடத்தைப் பெற்றுள்ளது.

   

2024-ஆம் ஆண்டின் "Good Childhood" அறிக்கையில், பிரித்தானியாவில் 25.2 சதவீதம் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் திருப்தியில்லையென்று கூறியுள்ளனர்.

இந்த அறிக்கையின்படி, போலந்து (24.4%) மற்றும் மால்டா (23.6%) ஆகிய நாடுகளை விட பிரித்தானியா மிக மோசமான இடத்தில் உள்ளது. பிரித்தானியாவில் சிறுவர் நலனின் குறைவுக்கு காரணங்கள் இந்த நிலைமைக்கு பல காரணங்கள் உள்ளன. சமூகச் சமநிலையின்மை, உணவுக் குறைபாடு, வறுமை மற்றும் மனநலப் பிரச்சினைகள் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

11 சதவீதம் குழந்தைகள் போதிய உணவின்மை காரணமாக உணவை தவிர்க்கின்றனர், மேலும் இவற்றில் 50 சதவீதம் பேர் பொழுதுபோக்குச் செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை.

விலைவாசி உயர்வு, சமூக குற்றச்செயல்கள் மற்றும் பள்ளி வாழ்வில் ஏற்பட்டிருக்கும் அழுத்தங்கள் இளைஞர்களின் நலனை மேலும் பாதிக்கின்றன. பிரித்தானியாவில், பள்ளி மாணவர்கள் பலர் குற்றச்செயல்கள் மற்றும் பழிவாங்கல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதில், 14.3 சதவீதம் மாணவர்கள் தங்கள் பள்ளி அனுபவத்தில் திருப்தியில்லையென்று தெரிவிக்கின்றனர்.

மனநல பிரச்சினைகள்

பிரித்தானியாவில் குழந்தைகளின் மனநலப் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளது. 2.7 லட்சம் குழந்தைகள், தாங்கள் கொண்ட மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி பெற காத்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மனநல ஆலோசனைகள் மற்றும் ஆதரவு கிடைப்பதற்கான முறைமைகள் குறைவாக இருப்பது இளைஞர்களின் நலனில் மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஐரோப்பிய நாடுகளின் ஒப்பீடு

நெதர்லாந்து, பின்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நார்டிக் நாடுகள் சிறுவர் நலனில் சிறப்பாக செயல்படுகின்றன. இங்கு வாழ்க்கை திருப்தியின்மை குறைவாக (10.8% - 11.3%) பதிவாகியுள்ள நிலையில், பிரித்தானியா மற்றும் போலந்து போன்ற நாடுகளில் அதிகமாகவே காணப்படுகிறது.