காஞ்சிபுரத்தில் தினமும் அதிகாலையில் மார்கழி பஜனை பாடி ஊர்வலமாக செல்லும் சிறுவர்-சிறுமிகள்
சிறுவயதில் இருந்தே பக்தியை வளர்த்தால் அவர்களுக்கு ஒழுக்கம் ஏற்படும். படிப்பிலும் ஆர்வம் வளரும். சிறுவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், படிப்புக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில் போன்றவை வழங்கப்படுகின்றன.
காஞ்சிபுரம், திருப்பக்கூடல் தெருவில் இந்தி உள்ளிட்ட பல மொழிகளை இலவசமாக கற்றுத்தரும் பண்டிட் சாமுண்டீஸ்வரி சேகர் மாணவ-மாணவிகள் இடையே ஆன்மிக பக்தியை வளர்க்கும் எண்ணத்துடன் ஆண்டுதோறும், மார்கழி மாதம் பஜனை நடத்தி வருகிறார். மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து தினந்தோறும் பஜனை நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதில், பள்ளி சிறுவர்-சிறுமிகள் பங்கேற்று, திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட பாசுரங்களை பாடி, தெருக்களில் ஊர்வலமாக செல்கின்றனர்.
கிருஷ்ணர், ராதை கோலத்தில் தினந்தோறும் இந்த பஜனை திருப்பக்கூடல் தெருவில் தொடங்கி யாதவ தெரு வழியாக பாண்டவ தூதர் பெருமாள் கோவிலில் முடிவடைகின்றது. இது குறித்து, திருப்பாவை சபா நிர்வாகி சாமுண் டீஸ்வரி சேகர் கூறியதாவது:- சிறுவயதில் இருந்தே பக்தியை வளர்த்தால் அவர்களுக்கு ஒழுக்கம் ஏற்படும். படிப்பிலும் ஆர்வம் வளரும். அதற்காக, பஜனையை ஆரம்பித்தோம். தொடக்கத்தில், சிலர் மட்டும் பங்கேற்றனர்.
தற்போது, 50 சிறுவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை இலவசமாக கற்றுத்தந்து மொழியாற்றலை வளர்க்கின்றோம். பள்ளி மாணவ-மாணவிகள், மார்கழி மாதத்தில், தினமும் அதிகாலையில் எழுந்து, குளித்து, பஜனையில் பங்கேற்கின்றனர். இந்த சிறுவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், படிப்புக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில் போன்றவை வழங்கப்படுகின்றன.
திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களுக்கு விளக்க உரையும் வழங்கப்பட்டு அதை ஒப்புவிப்பவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 7-ம் வகுப்பு பள்ளி மாணவன் ஹரிகரன் கூறும்போது, "இறை வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையை பாடும்போது மனதுக்கு உற்சாகமாக உள்ளது. சுறுசுறுப்பாக செயல்பட முடிகின்றது. அதனால் நான் 4 வருட மாக மார்கழி மாத பஜனையில் கலந்து கொள்கின்றேன்.
எங்களை மார்கழி மாத பஜனை பக்குவப்படுத்தி உள்ளது. பாடங்களில் அதிக கவனம் செலுத்த முடிகின்றது. தமிழ் உச்சரிப்பு நன்றாக வளர்கின்றது" என்று தெரிவித்தார்.