நான் நடிப்பு பசியில் இருக்கிறேன்

04.11.2022 12:26:15

குல் பிரீத் சிங்குக்கு தமிழில் கார்த்தி ஜோடியாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திருப்புமுனை படமாக அமைந்தது. சூர்யாவுடன் என்.ஜி.கே. படத்தில் நடித்தார். தற்போது கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீப காலமாக ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வந்த படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும் எனவே திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்க போகிறார் என்றும் கிசுகிசுக்கள் பரவின. இந்த நிலையில் ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், ''ஒரு நடிகையாக நான் நடிப்பு பசியில் இருக்கிறேன். எனக்கு இருக்கும் நடிப்பு பசி கொஞ்சமும் குறையவில்லை. இந்த வருடம் இதுவரை எனது நடிப்பில் ஐந்து படங்கள் திரைக்கு வந்துள்ளன. இப்போது எனது முழு கவனமும் அடுத்த ஆண்டு எத்தனை படங்களில் நடிக்க வேண்டும் என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் வரவேண்டும் என்பதில்தான் எனக்கு ஆர்வம் இருக்கிறதே தவிர வேறு எதன்மீதும் அக்கறை இல்லை. திருமணம் செய்யப்போகிறேன் என்ற தகவலில் உண்மை இல்லை'' என்றார்.