சிறைகளில் 70 வீதம் போதைப்பொருள் குற்றவாளிகள்!
|
நாட்டின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 70 சதவீதமானோர் போதைப்பொருள் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். |
|
குருநாகல் மாவட்டத்தில், கோப்பேகனே பாடசாலையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். தற்போது இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சுமார் 40,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நகரப் பாடசாலைகளில் மாத்திரமின்றி, கிராமப்புறப் பாடசாலைகளிலும் போதை மாத்திரைகளின் புழக்கம் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. இதனை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய அளவில் பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. போதைப்பொருள் பாவனையின் பிடியில் சிக்குண்டுள்ளவர்களில் மிகச் சிறு வயதுடைய சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, போதைப்பொருளுக்கு அடிமையாகும் பிரிவினரில் 8 முதல் 14 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களும், 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுமிகளும் பெருமளவில் காணப்படுகின்றனர். நாம் நினைப்பதை விடவும் இது மிகவும் பாரதூரமான மற்றும் அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு சமூகப் பேரழிவு ஆகும். எதிர்காலத்தில் பிள்ளைகளைப் இந்த பேராபத்திலிருந்து பாதுகாப்பது பிரதான தேவையாகும். பாடசாலைச் சூழலில் உருவாகியுள்ள இந்த அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பாடசாலை வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் போதைப்பொருட்களை விநியோகிப்பதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ எக்காரணம் கொண்டும் இடமளிக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார். |