
வடக்கில் ஏன் படைக்குவிப்பு?
முல்லைத்தீவில் இரண்டு மனிதர்களுக்கு ஒரு படை என்ற ரீதியிலும், யாழ்ப்பாணத்தில் 14 மனிதர்களுக்கு ஒரு படை என்ற விகிதத்திலும் படை குவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எந்த வகையில் நியாயமாகும். யுத்தம் முடிந்தால் நன்மை கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்களுக்கு குண்டு விழாத நாட்டில் வரவு,செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை அதிகரித்து செல்வதையே காண முடிகிறதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டார். |
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ளபோதும் நாங்கள் அபிவிருத்தி விடயத்தில் பின்நோக்கியே போகின்றோம். நாட்டில் குண்டு விழாமல் இருந்தாலும் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நாட்டில் அழிவுகளை ஏற்படுத்திய விடயமாக யுத்தம் உள்ளது. இதற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்த போதும், படையினரை பராமரிக்கவும் ஒதுக்கப்படும் நிதி உச்சயமாக இருந்தது. இந்நிலையில் யுத்தம் முடிந்துவிட்டால் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறையும் என்றும் அந்த நிதியின் ஊடாக ஆக்கத்திறன் அபிவிருத்திகளுக்கு அதிகளவான நிதியை ஒதுக்க முடியும் என்றும் கூறினர். ஆனால், யுத்தம் முடிவடைந்துள்ள போதும் கடந்த முறையை விடவும் இம்முறை துண்டுவிழும் தொகை 160 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. இதேவேளை இந்தியா மற்றும் பிரிட்டனில் படைகளின் எண்ணிக்கையுடன் அந்நாட்டு மக்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் எமது நாட்டில் காணப்படும் படையின் அளவு அதிகமாகவே உள்ளது. இங்கே முல்லைத்தீவில் இரண்டு மனிதர்களுக்கு ஒரு படை என்ற ரீதியிலும், யாழ்ப்பாணத்தில் 14 மனிதர்களுக்கு ஒரு படை என்ற விகிதத்தில் படை குவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எந்த வகையில் நியாயமாகும் என்பதனை கேட்டுக்கொள்கின்றேன். யுத்தம் முடிந்தால் நன்மை கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்களுக்கு குண்டு விழாத நாட்டில் வரவு, செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை அதிகரித்து செல்வதையே காண முடியுமாக இருக்கின்றது என்றார். |