ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அஞ்சலி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளரான முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது 5-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு திரளாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவியும் வணங்கினார்கள்.
பின்னர்அங்கு உறுதி மொழியும் ஏற்றுக்கொண் டனர். ஓ.பன்னீர்செல்வம் உறுதி வாசிக்க அதை அங்கு கூடி இருந்தவர்கள் திரும்ப சொல்லி உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், துணை ஒருங்கிணைப் பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள், பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, நத்தம் விசுவநாதன், கே.பி. அன்பழகன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜராம், பாலகங்கா, வேளச்சேரி அசோக், விருகை வி.என்.ரவி, ராஜேஷ், வெங்கடேஷ்பாபு, பெஞ்சமின், தி.நகர் சத்யா, வாலாஜாபாத் கணேசன், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் டாக்டர் சுனில், மாணவரணி செயலாளர் விஜயகுமார், மாநில மாணவரணி துணை செயலாளர் வக்கீல் ஆ.பழனி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலாளர் இ.சி.சேகர், கணேசன், சொ.கடும்பாடி, எம்.என்.இளங்கோ, வைத்தியநாதன்.
பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் எ. ராஜசேகர், காரப்பாக்கம் லியோ என்.சுந்தரம், மதுரவாயல் வடக்கு பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன் உள்பட ஏராளமான பேர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.