
ஆப்கானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 20 பேர் உயிரழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குனார் மாகாணத்தின் நோர்கல் மாவட்ட மசார் பள்ளத்தாக்கில் பல வீடுகள் நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் புதைந்துவிட்டதாக தலிபான் அரசாங்கத்தின் பல வட்டாரங்கள் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடரும்போது இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேநேரம், மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து அவசர உதவிக்கு தலிபான் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சில கிராமங்களை விமானம் மூலம் மட்டுமே அடைய முடியும்.
இப்பகுதியில் உள்ள வைத்தியசாலைகள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன.
அதே நேரத்தில் குடியிருப்பாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி இடிந்து விழுந்த கட்டமைப்புகளில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2023 ஒக்டோபர் மாதம் மேற்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இது அண்மைய ஆண்டுகளில் ஆப்கானை தாக்கிய மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.