நான் விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனை துரோகி என கூறவில்லை - சிவாஜிலிங்கம் 

29.09.2021 08:48:28

என்னைப்பற்றி சுமந்திரன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்ததை நான் அவதானித்தேன். வல்வெட்டித்துறை நகரசபை கூட்டமைப்பிடம் இருந்து பறிபோனதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஐயாவை துரோகிகள் என்ற அர்த்தத்தில் நான் பேசியதாக சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். நான் விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனை துரோகி என கூறவில்லை. எனது காணொளியை பார்த்தால் நன்கு தெரியும்.

நான் யாரையும் துரோகி என்று கூறவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் விக்னேஸ்வரன் ஐயாவுக்கு அனுப்பியதாக சுமந்திரன் கூறும் கடிதத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும். நான் விக்னேஸ்வரன் ஐயாவுக்கு எழுதிய கடிதம் என்பது வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் தொடர்பாக உள்ள பிரச்சினைகளை பற்றியதாகும்.அதில் நான் யாரையும் துரோகி என்று கூறவில்லை.

நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் இல்லை ரெலோவிலும் இல்லை. ஆனால் நான் ஏதோ கள்ள உறவு வைத்திருப்பது போல சித்தரிக்கின்றார். வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ்த் தேசியத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக நான் செயல்பட்டேன்.

ஒட்டுக்குழுக்கள் என்று ரெலோவையும் புளொட்டையும் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் அவர்களுடைய வாக்குகளையும் சேர்த்துத்தான் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தார் என்பதை அவர் உணரவேண்டும் என்றார்.