துருக்கியிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் 10 பேரை நாடு கடத்த தீர்மானம்
துருக்கியில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு தூதுவராலயங்களை சேர்ந்த 10 தூதுவர்களை நாடு கடத்த துருக்கிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமெரிக்கா, ஜேர்மன் உள்ளிட்ட 10 நாட்டு தூதுவர்களை வெளியேற்றுமாறு துருக்கி ஜனாதிபதி ரிசப் ரேய்ப் எர்டோகன், அந்நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
துருக்கியில் சிறையடைக்கப்பட்டுள்ள சிவில் சமூக தலைவர் ஒஸ்மான் கவாலாவை விடுவிக்க வேண்டுமெனக் குறித்த 10 தூதுவர்களும் இணைந்து துருக்கிய அரசாங்கத்திற்கு அழுத்தத்தைப் பிரயோகியிருந்தனர்.
வெளிநாட்டு தூதுவர்கள் இணைந்து பொதுவாக இராஜதந்திர செயற்பாட்டுக்கு எதிராகச் செயற்படுவதில்லை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளியேறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடுகளில் பெரும்பாலான நாடுகள் ‘நேட்டோ’ அமைப்பைச் சேர்ந்தவையெனத் தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு இதுவரை இந்த விடயம்குறித்து உத்தியோகபூர்வமாக எந்தவிதமான அறிவித்தலும் கிடைக்கவில்லையென குறித்த தூதுவராலயங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தாம் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அமைச்சுக்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, நோர்வே அரசாங்கம் கருத்து வெளியிடுகையில், தமது தூதுவர் எந்த விதமான பிழையான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளது.
துருக்கியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள்குறித்து தமது நாடு தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என நோர்வேயின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.