ரஷ்யாவை தாக்கிய பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை!

12.03.2026 11:26:43

உக்ரைனிய தாக்குதலுக்கு பின்னால் பிரித்தானியாவின் தொழில்நுட்ப உதவி இருப்பதாக ரஷ்யா நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனின் பிரித்தானிய தொழில்நுட்பமான ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யாவின் பிரையன்ஸ்க் நகர் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது. உக்ரைன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யாவின் ஏவுகணை பாகங்களை தயாரிக்கும் முக்கிய தொழிற்சாலையை தாக்கியதாக அறிவித்த நிலையில், குடியிருப்பு மற்றும் பொதுமக்கள் கூடும் இடம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரையன்ஸ்க் நகர் மீது நடத்தப்பட்ட ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை தாக்குதலுக்கு பின்னால் பிரித்தானிய நிபுணர்களின் நேரடி பங்களிப்பு இருப்பதாகவும், ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணையை பிரித்தானியாவின் தொழில்நுட்ப உதவியின்றி இயக்க சாத்தியமில்லை என்றும் ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் ரஷ்யா இந்த நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதனையும் தங்களது போர் வியூகத்தில் கணக்கில் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ரஷ்ய நிலப்பரப்பு மீது நடத்தப்படும் உக்ரைனின் தாக்குதலை தடுக்க ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கை தொடரும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.