"ட்ரம்ப்பினால் ஜேர்மன் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்"

14.07.2025 07:52:36

டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்புகளால் ஜேர்மன் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு ட்ரம்ப், மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று சனிக்கிழமை அச்சுறுத்தினார்.

   

இதனைத் தொடர்ந்து, ட்ரம்பின் வரிவிதிப்பு சர்ச்சைக்கு தீர்வு காண வரும் வாரங்களைப் பயன்படுத்த ஜேர்மனியின் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) களமிறங்கியுள்ளார்.

அதன்படி, அமெரிக்காவுடனான அதிகரித்து வரும் வர்த்தகப் போரை தீர்க்க பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் தீவிரமாகப் பணியாற்றுவதாக மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேன்சலர் மெர்ஸ் மேலும் கூறுகையில், "ஆகத்து 1 வரையிலான இரண்டரை வாரங்களை ஒரு தீர்வைக் காண இப்போது இந்த நேரத்தைப் பயன்படுத்த விரும்புகிறோம்.

நான் இதற்கு உண்மையிலேயே உறுதிபூண்டுள்ளேன். இந்த வரிகளால் ஜேர்மன் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

30 சதவீத அமெரிக்க வரிகள் விதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். ஐரோப்பாவில் ஒற்றுமை மற்றும் அமெரிக்க ஜனாதிபதியுடன் ஒரு விவேகமான உரையாடல் இப்போது தேவை" என தெரிவித்துள்ளார்.