மோடியின் மும்பை பேரணியில் இராணுவ வீரர் போல் நுழைந்த நபரால் பரபரப்பு!

22.01.2023 14:44:59

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் கர்நாடகா மற்றும் மராட்டியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பிரதமர் மோடியின் வருகைக்காக குறித்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி பேரணியாக மும்பை நகரை அண்மிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் இராணுவ சீருடையில் கூட்டத்தின் உள்ளே புகுந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மோடியின் பேரணியில் நுழைந்த மர்ம நபர்

பிரதமர் மோடியின் பேரணி பந்திரா-குர்லா காம்ப்ளெக்ஸ் பகுதிக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் குறித்த மர்ம நபர் இராணுவ சீருடையுடன் தான் இராணுவ வீரர் எனக்கூறி அதியுயர் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளார்.

அவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மும்பை குற்றப் பிரிவு காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றனர், பின்னர் அவர் இராணுவ பாதுகாப்பு வீரர் இல்லை என தெரிந்ததையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட குறித்த நபர் 35 வயதையுடைய ரமேஷ்வர் மிஷ்ரா எனும் பெயருடைய அறிவியல் பட்டதாரி என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐ.பி.சி சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட குறித்த நபரை, 24-ந்தேதி வரை காவல்துறைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் மும்பை விஜயம்

இதேவேளை, மும்பை நகரின் வளர்ச்சிக்காக 38 ஆயிரத்து 800 கோடி ரூபா பெறுமதியிலான பல்வேறு செயல்திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்துள்ளார்.