சென்னையில் பெட்ரோல் விலை 105 தாண்டியது
பெட்ரோல், டீசல் விலை இன்று முறையே 30, 34 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 105ஐ தாண்டியது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் 87 டாலரை தாண்டி உள்ளது. இதனால் இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. 2 நாட்கள் இடை வெளிக்கு பின் நேற்று நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இன்றும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 104.83க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 30 காசுகள் அதிகரித்து 105.13க்கும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 101.25க்கும் விற்பனையாகிறது.
தமிழகத்தின் பிற பகுதிகளில் கடந்த வாரமே பெட்ரோல் விலை 105 தாண்டிய நிலையில் இன்று சென்னையிலும் அதனை தாண்டி உள்ளது. சேலத்தில் இன்று பெட்ரோல் 30 காசு அதிகரித்து 105.45க்கும், டீசல் 34 காசு அதிகரித்து 101.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.