தமிழ்நாட்டுக்கு அள்ளி கொடுத்த மத்திய பட்ஜெட்.
2026-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தபோது, உரையின் தொடக்கத்திலேயே தமிழகத்தை குறிப்பிட்டுப் பேசியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை விரிவாகக் காண்போம்.
மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை 41% ஆக தொடர்ந்து நீட்டித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வுக்காக ரூ.1.4 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோருக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, குறைந்த அளவில் வரி செலுத்துவோருக்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், விபத்து காப்பீட்டு இழப்பீட்டு தொகைக்கு வருமான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலா செல்பவர்களுக்கான வரி பிடித்தம் 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக இந்த பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் உள்ளன: நாடு முழுவதும் மாவட்டந்தோறும் மகளிர் விடுதிகள் கட்டப்படும்.
மகளிர் சுயஉதவி குழுக்கள் தங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய பிரத்யேக சந்தைகள் அமைக்கப்படும். தொழில் முனைவோராக விரும்பும் பெண்களுக்குச் சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்படும்.
தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த நிதியமைச்சர் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்:
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் பிரம்மாண்டமான கலாச்சார மையம் அமைக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு ஏரியில் அதிநவீன பறவை கண்காணிப்பு மையம் உருவாக்கப்படும். பொதிகை மலையில் சூழலியல் மாறாத வகையில் புதிய மலையேற்றத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மற்றும் பயண நேரத்தைச் சுருக்க அதிவேக ரயில் தடம் அமைக்கப்படும்.