இறுதிநாளில் 73பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய ட்ரம்ப்!
ஆட்சியில் இருந்து வெளியேறும் இறுதிநாளிலும் டொனால்ட் ட்ரம்ப், தனக்கு நெருக்கமான 73 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், அரசாங்க மரியாதையுடன் வெள்ளை மாளிகையிலிருந்து விடைபெற்றார்.
இதற்கு முன்னதாக, அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.
இதில், பண மோசடி வழக்கில் சிக்கிய தனது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் உள்ளிட்ட 73 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.
வெள்ளை மாளிகை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதும், ஸ்டீவ் பானனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தனது மகள் இவான்கா ட்ரம்பின் மாமனார் சார்லஸ் குஷ்னர், ட்ரம்ப்பின் தேர்தல் பிரசார மேலாளர் பால் மனாபோர்ட், முன்னாள் ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் உள்ளிட்டோருக்கு அவர் பொது மன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.