தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் நடுவர் விபத்தில் மரணம் - ஷேவாக் இரங்கல்

10.08.2022 10:35:57

நண்பர்களுடன் ஜாலியாக கோல்ப் விளையாட சென்று விட்டு நேற்று காலை காரில் திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் நடுவர் 73 வயது ரூடி கோயர்ட்சென். 1992-ம் ஆண்டு, முதல் முறையாக நடுவராக பணியாற்றிய அவர் மொத்தம் 331 சர்வதேச போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். 2010-ம் ஆண்டுக்கு பிறகு நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டவுனில் குடும்பத்துடன் வசித்து வந்த ரூடி கோயர்ட்சென், நண்பர்களுடன் ஜாலியாக கோல்ப் விளையாட சென்று விட்டு நேற்று காலை காரில் திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அவருடன் சென்ற மேலும் 3 பேர் இந்த விபத்தில் பலியானார்கள். கோயர்ட்சென் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு' ரூடி கோயர்ட்செனுடன் எனக்கு நல்ல உறவு உண்டு. களத்தில் நான் அவசரகதியில் ஷாட்டுகள் அடிக்கும் போதெல்லாம் சத்தம் போடுவார். புத்திசாலித்தனமாக விளையாடு. உனது பேட்டிங்கை பார்க்க விரும்புகிறேன் என்று சொல்வார். ஒரு முறை தனது மகனுக்கு தரமான ஒரு காலுறை (பேடு) வாங்க வேண்டும் என்று கூறி அது பற்றி விசாரித்தார்.

அவருக்கு அதை பரிசாக அளித்தேன். பழகுவதற்கு இனிமையான அற்புதமான மனிதர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி' என்று கூறியுள்ளார். இதே போல் முன்னாள் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், யுவராஜ்சிங், காலிஸ், சங்கக்கரா, வாசிம் அக்ரம் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.