இந்தி திணிப்பு போராட்டத்தில் சிவா திலீபன் வீரமரணம்!

19.03.2026 08:18:01

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின்போது, "தமிழ் வாழ்க" என முழக்கமிட்டவாறு ரயில் முன் பாய்ந்து, ரயிலில் அடிபட்டு தீவிர சிகிச்சையில் இருந்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்து மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மார்ச் 12 ஆம் தேதி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் போராட்டம் தொடர்ந்தது. சென்னை பூங்கா (பார்க்) ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழித்து மே 17 இயக்கத்தினர் திருமுருகன் காந்தி தலைமையில் முழக்கமிட்டனர். இந்தப் போராட்டத்தில் ரயில் நிலையத்திலிருந்து ஒருசில பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிவா திலீபன் என்ற சிவக்குமார் 'தமிழ் வாழ்க' என முழங்கியவாறு திடீரென ரயில் முன் பாய்ந்தார்.

இதனால் பலத்த காயமடைந்த அவர்ம் ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "உயிரை அல்ல, உழைப்பைக் கொடுங்கள்" எனத் தெரிவித்து, சிவா திலீபன் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற பல்வேறு அமைப்பினர் மருத்துவமனையில் சிவா திலீபனை சந்தித்து, மருத்துவர்களிடம் அவரது நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், சிவக்குமார் என்ற சிவா திலீபன் (56) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின்போது, ரயிலில் அடிபட்டு தீவிர சிகிச்சையில் இருந்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.