சிங்கப்பூரில் சில மணிநேரத்தில் அதிகரித்த கொரோனா

28.10.2021 15:20:50

சிங்கப்பூரில் இன்று  காலைமுதல் திடீரென கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. சில மணி நேரங்களிலேயே 5,324 பேர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது அந்நாட்டு சுகாதார துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கொரோனாவின் டெல்டா ரகம் தற்போது சீனா மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. முன்னதாக சீனாவில் வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பல மாகாண எல்லைகள் மூடப்பட்டன.

இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள வேற்று நாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் விடுதிகளில் வைரஸ் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில மணி நேரங்களிலேயே 5,324 பேர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுள் 66 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 76 பேர் மிதமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.


முன்னதாக சிங்கப்பூர் அரசு வைரஸ் தாக்கம் குறைந்ததால் மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்குள் வெளிநாட்டு பயணிகளை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதித்து வந்தது. ஆனால், தற்போது திடீரென வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.