’எந்தவொரு நடவடிக்கையும் நிறுத்தப்படமாட்டாது’

22.02.2024 07:55:11

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை என்று  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குதல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

இந்த வேலைத்திட்டம் தொடர்பில் எம்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த செயற்பாட்டைச் சீர்குலைக்க பல்வேறு நபர்களும் குழுக்களும் முயற்சித்து வருகின்றனர். போதைப்பொருள் வலையமைப்பு மூலம் பணம் பெறுபவர்கள் அந்தக் குழுக்களுக்கு பணத்தை செலவிடுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.