
முதல் நாளே டியூடுக்கு கிடைத்த ராஜ மரியாதை!
தமிழ் சினிமாவில் யூத் சென்சேஷனாக உருவெடுத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரதீப்புக்கு முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றி கிடைத்தது. அப்படத்தின் மூலம் இதுவரை எந்த தமிழ் நடிகரும் செய்யாத சாதனையை படைத்திருந்தார் பிரதீப். அது என்னவென்றால், முதல் படத்திலேயே 100 கோடி வசூல் அள்ளிய முதல் தமிழ் ஹீரோ என்கிற பெருமையை பெற்றார் பிரதீப். இந்த சாதனையை இதுவரை எந்த நடிகரும் முறியடிக்கவில்லை. லவ் டுடே வெற்றிக்கு பின்னர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தில் நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன்.
டிராகன் திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியது. அதன்படி டிராகன் திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூல் அள்ளி, பிரதீப்பின் கெரியரை ஜெட் வேகத்தில் உயர்த்தியது. தொடர்ந்து இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த பிரதீப், அடுத்ததாக டியூட் என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக டியூட் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார்.
டியூட் திரைப்படத்திற்கு போட்டியாக பைசன், டீசல் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனாலும், இதில் அதிக எதிர்பார்ப்புள்ள படம் டியூட் தான். இதன் காரணமாக மற்ற இரண்டு படங்களைக் காட்டிலும் டியூட் திரைப்படம் அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. பிரதீப் ரங்கநாதனின் கெரியரில் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்படும் திரைப்படம் டியூட் தான். சென்னையில் மட்டும் டியூட் திரைப்படத்திற்கு முதல் நாளில் 462 ஷோக்கள் ஷெட்யூல் செய்யப்பட்டு உள்ளது. பிரதீப்பின் கடைசி படமான டிராகனுக்கு கூட முதல் நாளில் சென்னையில் 127 ஷோக்கள் தான் கிடைத்திருந்தன.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், முன்னணி ஹீரோக்களான சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களைக் காட்டிலும் பிரதீப்பின் படத்திற்கு அதிகப்படியான ஷோக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சிவகார்த்திகேயனின் கடைசி படமான மதராஸிக்கு சென்னையில் முதல் நாள் 434 ஷோக்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் சூர்யாவின் கடைசி படமான ரெட்ரோ மே 1ந் தேதி ரிலீஸ் ஆனபோது, அன்றைய தினம் சென்னையில் அப்படத்திற்கு 460 ஷோக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதையெல்லாம் காட்டிலும் டியூட் படத்திற்கு கூடுதலாக காட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் கோலிவுட் வட்டாரமே வியப்பில் ஆழ்ந்துள்ளது