காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல்!

04.11.2022 12:19:42

இஸ்ரேல் நாட்டில் பிரதமர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சியும், அதிதீவிர யூத மதக் கூட்டணி ஆகியோரை உள்ளடக்கிய வலதுசாரி கூட்டணியினருக்கும் சேர்த்து 64 இடங்கள் கிடைத்தன. தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் பிரதமராகிறார் பெஞ்சமின் நெதன்யாகு. இதனையடுத்து காபந்து அரசின் பிரதமராக இருந்த யாயிர் லாபிட் தனது வாழ்த்துகளை நெதன்யாகுவுக்கு தெரிவித்துள்ளார். மறுபுறம் இது பாலஸ்தீனியர்கள் மற்றும் அருகிலுள்ள அரபு நாடுகளிடையே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறாது. அதாவது கடந்த 1948-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இருக்கிறது. ஆனால், அதன் அருகிலுள்ள பாலஸ்தீனம் அங்கீகாரத்துக்காகப் போராடி வருகிறது. இரண்டு தரப்பு நாடுகளும் ஒன்றையொன்ரு கடுமையாகத் தாக்கிக்கொள்ளவதுண்டு. இந்த மோதல் சமீபகாலமாக மேலும் வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகு வெற்றி பெற்றதை தொடர்ந்து காசாவில் இருந்து 4 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஜெனின் பகுதியில் அல்-குத்ஸ் படையின் தளபதி படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.