9ஆவது முறையாக மகுடம் சூடியது ஜூவெண்டஸ் அணி!

21.01.2021 09:20:05

‘இத்தாலியானா சுப்பர் கப்’ கால்பந்து தொடரில், ஜூவெண்டஸ் அணி 9ஆவது முறையாக மகுடம் சூடியுள்ளது.

சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஜூவெண்டஸ் அணியும் நபோலி அணியும் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போட்டியின் 64ஆவது நிமிடத்தில் ஜூவெண்டஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டீயானோ ரொனால்டோ, அணிக்காக முதல் கோலை பதிவுசெய்தார்.

தொடர்ந்து பதில் கோலை புகுத்துவதற்கு நபோலி அணி வீரர்கள், கடுமையாக போராடினர். எனினும் அது பலனளிக்கவில்லை.

இதனையடுத்து போட்டியின் 95ஆவது நிமிடத்தில் ஜூவெண்டஸ் அணியின் மற்றொரு வீரரான அல்வரோ மோர்டாரா, அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார்.

மேற்கொண்டு கோல்கள் அடிக்கப்படாததால், போட்டியின் இறுதியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஜூவெண்டஸ் அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.