சிதிலமான பள்ளியை சீரமைத்த கார்த்தி

10.08.2022 10:24:20

நடிகர் கார்த்தி சினிமாவை தாண்டி உழவன் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு உதவி வருகிறார். இந்த நிலையில் சிதிலமடைந்த அரசு பள்ளியொன்றையும் சீரமைத்து கொடுத்துள்ளார். இதுகுறித்து கார்த்தி அளித்துள்ள பேட்டியில், ''நான் விருமன் படப்பிடிப்பில் இருந்தபோது வயதான சிலர் வந்து என்னை சந்தித்தனர். பக்கத்தில் ஒரு பள்ளி இருக்கிறது. வந்து பாருங்கள் என்று அழைத்தனர். அந்த பள்ளியை பார்த்தபோது சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

அதை சீரமைத்து கொடுக்க முடிவு செய்தேன். அகரம் மற்றும் அங்குள்ள சிலர் உதவியோடு பல லட்சம் ரூபாய் செலவில் அந்த பள்ளியை சீரமைத்தோம். சீரமைத்த பிறகு அந்த பள்ளியில் அதிக குழந்தைகள் படிக்க வருகிறார்கள். செல்வந்தர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள சிதிலமடைந்த பள்ளிகளை சீரமைப்பதற்கு உதவ முன்வரவேண்டும். கிராமத்து கதையம்சம் உள்ள படங்களுக்கு மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். நான் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடிக்க விரும்புகிறேன்" என்றார்.