‘சர்வாதிகாரம் என்றால் என்ன?’

15.11.2024 08:16:27

திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் பாளையங்கோட்டையில் (14.11.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். அப்போது கருத்து தெரிவிக்க முயன்ற சில நிர்வாகிகளுக்கு இந்த கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதோடு, ‘இது எனது கட்சி. எனது முடிவு. யாரும் கருத்துச் சொல்லத் தேவையில்லை’ என சீமான் கூறியதாக கூறப்படுகிறது.

   

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசுகையில், “சர்வாதிகாரம் இல்லாமல் எந்த செயலையும் ஒரு சரி செய்ய முடியாது. சர்வாதிகாரம் இல்லாத எந்த செயலும் நேர்மையாக இருக்காது. இறையன்பு எழுதிய புத்தகத்தைப் படியுங்கள். ஒரு நேர்மையாளர், சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும்.

காமராஜர், நேரு போன்ற மிகச்சிறந்த ஆட்சியாளர்கள், எல்லோரும் அன்பான சர்வாதிகாரியாகத் தான் இருந்துள்ளார்கள். ஒரு ஆசிரியர் படிக்காத மாணவனுக்குப் பாடம் மனதில் நிற்க வேண்டும் என 10 முறை வீட்டுப்பாடமாக எழுதிட்டு வா என்று சொல்வது மாணவன் பார்வையில் சர்வாதிகாரமாகத் தெரியும். ஆனால், ஆசிரியர் பார்வையில் அது மாணவனின் நலனாகத் தெரியும். இதில் எது முக்கியம்?.

ஒரு குழந்தையைக் காப்பாற்ற எனது கையில் ஊசி இருக்கிறது. அந்த ஊசியைக் குழந்தைக்குச் செலுத்தினால் வலிக்கும். வலியை பொருட்படுத்தாமல் குழந்தைக்கு ஊசியைச் செலுத்தினால் தான் குழந்தை பிழைக்கும். அல்லது வலியை பொருட்படுத்தி குழந்தைக்கு வலிக்கும் என ஊசியைப் போடாமல் விடுவதா?. இதில் நான் என்ன செய்ய வேண்டும். கட்சி என்றால் விதி இருக்கிறது. முறை இருக்கிறது. எந்த ஒரு இயக்கத்தின், இயங்கியலுக்கும் ஒழுங்கியல் என்று ஒன்று உள்ளது. அதற்குக் கட்டுப்பட்டு இருந்தால் தான் உண்டு.

அதற்குள் சென்று நான் அப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் இருப்பேன் என்றால் கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் கட்சியை விட்டு வெளியில் போ என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இது வெகு தூரப் பயணம். அதில் சர்வதிகாரியாக இருக்கிறார். அப்படி என்றால் கட்சியை விட்டு சென்றிடுங்கள். சர்வாதிகாரம் இல்லாத கட்சியில் இருந்துகொள்ளுங்கள். இது மக்கள் பிரச்சினையா?. நாட்டுப் பிரச்சனையா?. இந்த பிரச்சனையால் விலைவாசி உயர்ந்து விட்டதா?, பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து விட்டதா?” எனப் பேசினார்.