‘வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி’

16.10.2024 08:04:52

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகள் (15.10.2024) அறிவிக்கப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி மற்றும் நவம்பர் 20ஆம் தேதி என இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி ஜார்கண்டில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

   

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதோடு நாடு முழுவதும் உள்ள 47 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரகாண்டில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள நாந்தேட் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் உத்தரவின் படி, வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார். மேலும், பாலக்காடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ராகுல் மாம்கூடத்திலும், செலக்கரா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ரம்யா ஹரிதாஸும் போட்டியிடுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.