நெருக்கடியில் தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவ தயாராகிவருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

26.04.2021 10:50:24

 

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடியில் தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவ தயாராகிவருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழு ஆதரவு அளிக்கிறது.

அந்நாட்டின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு மிக விரைவில் உதவ வேண்டும் என்பதற்காக, கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியம் சேகரித்து வருகிறது. இந்த ஒருங்கிணைப்புப் பணிகளை சிவில் பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய ஆணையத்தின் நெருக்கடி மேலாண்மை பிரிவு பொறுப்பாளர் ஜனஸ் லெனார்சிக் கூறுகையில்,

‘இந்தியாவின் அவசரத் தேவைக்கான ஒக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றை வழங்கி உதவுவதற்காக, உறுப்பு நாடுகளை ஐரோப்பிய நாடுகளின் அவசர மேலாண்மை ஒருங்கிணைப்பு மையம் ஒருங்கிணைத்து வருகிறது’ என கூறினார்.