எஸ்.ஐ.ஆர். குளறுபடிகளை கண்டித்து த.வெ.க. சார்பில் போராட்டம்!

16.11.2025 13:23:40

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர் பணியை எதிர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (16.11.2025) போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனையடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து விஜய் நேற்று (15.11.2025) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 38 மாவட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை சிவானந்த சாலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 2500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எஸ்.ஐ.ஆர்.க்கும், அதில் உள்ள குளறுபடிகளுக்கும் எதிராக பல்வேறு முழுக்கங்களை எழுப்பினர். ஓட்டுரிமையை உறுதி செய்ய வேண்டும், ஓட்டுரிமை எங்களுடைய உரிமை என்றும் அவர்கள் முழுக்கங்களை எழுப்பினர்.