2026 தமிழக தேர்தல்.

03.02.2026 15:27:31

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தங்களின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய பல முன்னணி அரசியல் தலைவர்கள் தற்போதைய தொகுதிகளை விட்டுவிட்டு புதிய தொகுதிகளுக்குக் குடிபெயர திட்டமிட்டு வருகின்றனர். ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை இந்த "பாதுகாப்பான தொகுதி" தேடல் படலம் தீவிரமடைந்துள்ளது.

பாஜகவின் வானதி சீனிவாசன் கோவை தெற்கிலிருந்து வடக்கு தொகுதிக்கும், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை அல்லது திருப்பூர் மாவட்டத்தின் ஏதேனும் ஒரு தொகுதிக்கும் மாற முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதிமுகவின் சி.வி.சண்முகம் விழுப்புரத்திற்கு பதில் மயிலம் தொகுதியை குறிவைத்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முறை எப்படியாவது சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்ற நோக்கில் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையின் காரைக்குடி தொகுதியை தேர்வு செய்துள்ளார்.

திமுக தரப்பில் அமைச்சர் பொன்முடி தனது மகனுக்காக திருக்கோவிலூரை விட்டுவிட்டு விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டியை தேர்ந்தெடுக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்திலிருந்து திருவாரூர் தொகுதிக்கு மாற வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. வேல்முருகன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் என நீண்ட பட்டியலே தொகுதி மாற்றத்திற்காக காத்திருக்கிறது. இத்தகைய மாற்றங்கள் அந்தந்தத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.