
சிறப்புரிமையில் இருந்து பொய் கூற முடியாது!
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு குறிப்பிட்டாலும், விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலையாக வேண்டும். அச்சமடைய வேண்டாம். குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலமளியுங்கள். சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு ஏதனையும் கூற முடியுமா என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். |
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற அமர்வின் போது சிறப்புக்கூற்றை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ' கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்படுவது முறையற்றது' என்று குறிப்பிட்டார்.இதனால் சபை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான, நளிந்த ஜயதிஸ்ஸ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் குறித்த கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக கூறினார்கள். அரசாங்கம் என்ற வகையில் இதனை பாரதூரமான பிரச்சினையாக பார்க்கின்றோம். அவ்வாறு ஆயுதங்கள் இருந்தால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதே. இவ்வாறு பாராளுமன்றத்தின் உள்ளே கூறினாலும், வெளியில் கூறினாலும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அந்த தகவல்களை பொலிஸாருக்கும், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு பாரதூரமான விடயங்களை குறிப்பிட்டு விட்டு, அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் போது அச்சமடைய வேண்டாம். பாராளுமன்ற சிறப்புரிமை என்று கூறிக்கொண்டு அதற்குள் இருக்க வேண்டாம். தேசிய பாதுகாப்பானது என்று முக்கியமான தகவலை வெளியிட்ட பின்னர் அவர்களை அழைத்து அந்தத் தகவல்களை பெற்றுக்கொள்வதையே குற்றப்புலனாய்வு மேற்கொள்கிறது. இந்த விடயத்தில் பயப்பட வேண்டாம். தகவல்களை வழங்குங்கள் என்றார். இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு சபையில் வேண்டியளவுக்கு பொய்களை கூறுகின்றனர். அவை ஊடகங்களில் வெளியாகின்றன. பொய் கூறவில்லையென்றால் அச்சமின்றி சென்று குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலமளியுங்கள். பிரபாகரனின் ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டதாக கூறியவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கும் போது அங்கு செல்ல பயப்படுகின்றனர். எதற்கு அவர்கள் பயப்பட வேண்டும். சாட்சியளிக்க முடியும். இது பொய்கூறும் இடமல்ல. உண்மைகளையே கூற வேண்டும் என்றார். |