ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி வழக்கு

30.07.2021 12:04:22

நடிகை ஷில்பா ஷெட்டி அந்த மனுவில், தன்னைப்பற்றிய அவதூறான செய்திகளை நீக்க வேண்டும் மற்றும் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இந்த விவாகரத்தில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், தனது கணவர் ராஜ் குந்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தவறான செய்தி வெளியிட்ட 29 ஊடகங்களின்  ஊழியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

சில ஊடக நிறுவனங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அனைத்து அவதூறான செய்திகளையும் நீக்க வேண்டும் மற்றும் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நடிகை ஷில்பா ஷெட்டி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.