“சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!”
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுதலையான பின்னர், ““சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” என்று தனது கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் முழங்கினார்.
திஹார் சிறையின் 4-வது கேட் வழியாக சிறையில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் வெளியே வந்தபோது அவரை ஆம் ஆத்மி தொண்டர்கள் குழு ஒன்று கையில் கொடியுடன் கோஷம் எழுப்பி வரவேற்றனர். அவர்களுடன் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களான அதிஷி, சவுரப் பரத்வாஜ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் இருந்தனர். 50 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வந்திருக்கும் டெல்லி முதல்வருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கேஜ்ரிவால், “உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் உங்களின் ஆசிர்வாதங்களை வழங்கினீர்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களால்தான் நான் இன்று உங்கள் முன்பு நிற்கிறேன். நான் திரும்பி வருவேன் என்று உங்களுக்கு வாக்கு கொடுத்திருந்தேன். இதோ உங்கள் முன்பு நிற்கிறேன்.
சர்வாதிகாரத்துக்கு எதிராக நாம் அனைவரும் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். சனிக்கிழமை காலை 11 மணிக்கு கன்னாட் பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று, அதன் பிறகு மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற இருக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் சந்திப்போம்" என்றார்.
முன்னதாக, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ம் தேதி நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு சில முக்கிய நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டது. அதன்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாக ரூ.50,000-க்கான தனிநபர் பத்திரம் வழங்க வேண்டும்.
அவர் ஜாமீனில் இருக்கும் காலங்களில் முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது. அவர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி இல்லாமல் எந்த அலுவலக கோப்புகளிலும் அவர் கையெழுத்திடக் கூடாது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு பற்றி பேசவோ அல்லது தன் மீதான குற்றச்சாட்டு பற்றி விவாதிக்கவோ கூடாது. இந்த வழக்கில் தொடர்புடைய எந்த சாட்சிகளுடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.