தமிழ்க் கூட்டமைப்பு புலிகளை போர்க் குற்றவாளிகள் என கூறுவது கவலையளிக்கிறது – காசி ஆனந்தன்

08.09.2021 05:30:28

2009இல் முள்ளிவாய்க்கால் போரில் சிறீலங்காவின் படைகளும் விடுதலைப்புலிகளும் குற்றவாளிகளே’ என்னும் ஐ.நா. ஆய்வாளர் அறிக்கையை ஏற்றுக் கொண்டு மனித உரிமை ஆணையாளருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக அல்லது அனுப்ப இருப்பதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி கவலையளிப்பதாக உள்ளது என ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவரது அறிக்கையில்..

ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 46-1 தீர்மானம் குறித்து எதிர்வரும் செப்டம்பர் மாதக் கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளர் திருமதி. மிச்சேல் பச்லெட் அவர்களின் வாய்மூல அறிக்கை வெளியாக இருக்கிறது. மனித உரிமை ஆணையாளருக்குத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் திரு.சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் என். சிறீகாந்தா ஆகியோர் தமிழீழத்தின் இற்றை நிலை குறித்துக் காட்டமான ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்கள் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட சில தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கடிதத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டதாகச் சிலர் கூறுவது சற்று ஆறுதல் தருவதாக உள்ளது. ஆய்வறிக்கையைத் தயாரித்தவர்கள் முன் சாட்சியம் அளித்த யாரோ புலிகளின் எதிரி ஒருவன் ‘புலிகள் குற்றம் இழைத்தார்கள்’ என்று பொய்களை அவன் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வைத்திருக்கலாம். ஆனால் புலிகளின் தூய்மையான விடுதலைப் போராட்ட வரலாற்றை நன்கு தெரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகளைப் போர்க் குற்றவாளிகளாக ஒப்புக் கொள்வது சரிதானா?

புலிகளைக் களங்கப்படுத்தும் உங்கள் கடிதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே களங்கப்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தேர்தல் மேடைகளில் ‘புலிகள் தியாகிகள்’ என்று பேசுகிறீர்கள். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் முன் ‘புலிகள் போர்க் குற்றவாளிகள்’ என்று தடுமாறுகிறீர்கள் தேவையா இது?

யாரோ ஒரு அழுகிப் போன சட்ட மூளை உங்களைக் குழப்புகிறது அந்தக் கெட்ட மூளையைக் கூட்டமைப்புக்கு வெளியே தூக்கிப் போடுங்கள். 1½ இலட்சம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்த – 99000 தமிழ்ப் பெண்களை விதவைகளாக்கிய – 5000க்கும் அதிகமான தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிப் பலிகொண்ட சிங்களப் படை வெறியர்கள் போர்க் குற்றவாளிகள் ஆகலாம் இக்கொடுமையை எதிர்த்துப் போராடிய புலிகளைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது எப்படி நியாயமாகும்?

இன அழிப்பாளரையும் இன விடுதலையாளரையும் சமநிலையில் வைத்துத்தூய்மையான புலிகளை இழிவுபடுத்தாதீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்களும் தங்கள் இயக்கத்தின் பேராதரவோடு அதை வளர்த்தெடுத்தவர்களும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளே. வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் என்பார்களே இன்று கூட்டமைப்பின் நடவடிக்கையிலும் அதே வஞ்சனையைத்தான் பார்க்கிறேன்.

முப்பதாயிரம் மாவீரர்களின் முகங்களில் காறி உமிழாதீர்கள். குண்டுகள் நடுவில் நின்று சாவைச் சந்தித்து தொடர் போர் முனைகளாலும் முள்ளிவாய்க்காலாலும் புலிகள் வளர்த்தெடுத்த நெருப்புத்தான் ஈழ விடுதலைப் போராட்டத்தை இன்று ஐ.நா மன்ற வாசலில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்பதை மறந்து குளிரூட்டி அறையில் உட்கார்ந்து உங்கள் சட்ட மேதாவித்தனத்தைக் காட்டிக் கடிதங்களை எழுதும் குழறுபடி அரசியலை நிறுத்துங்கள்.

புலிகள் களங்கப்படக் கூடாது என்பதை மட்டுமல்ல தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியை உள்ளடக்கிய தலைவர் பிரபாகரன் உருவாக்கி வளர்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களங்கப்படக் கூடாது என்பதையும் நினைவில் கொண்டே இக்கண்டனம் தெரிவிக்கப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சரி எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.