பிஎச்டி, எம்.பில் படிப்புகளுக்கு இன்று மதிப்பில்லை - நூரல்லா சர்ச்சை கருத்து
பிஎச்டி, எம்.பில் படிப்புகளுக்கு இன்று மதிப்பில்லை என ஆப்கன் புதிய கல்வித்துறை அமைச்சர் ஷேக் மெல்பி நூரல்லா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கனில் தலிபான் ஆட்சி விரைவில் பொறுப்பேற்க உள்ளது. பிரதமர் துணை பிரதமர் என அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 1990 களில் இருந்தது போல் ஆட்சி இருக்காது. இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு பெண்களுக்கு சுதந்திரம் வழங்குவோம். பெண் கல்வியை தடுக்க மாட்டோம் என தலிபான்கள் தெரிவித்தனர்.
தலிபான் தலைவர் முல்லா ஹசன் அகுண்ட் வெளியிட்ட முதல் அறிக்கையில், எதிர்காலத்தில் அரசு நிர்வாகம் மற்றும் வாழ்க்கை முறை ஷரியத் சட்டத்தின்படி ஒழுங்குபடுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆப்கனின் புதிய கல்வி அமைச்சர் ஷேக் மவுல்வி நூருல்லா முனீர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது: இன்றைய காலகட்டத்தில் பிஎச்டி, எம்.பில்., பட்டப்படிப்புகளுக்கு மதிப்பில்லை. முல்லாக்கள், தலிபான்கள் இன்று ஆப்கனில் ஆட்சி அமைத்து உள்ளனர். அவர்களிடம் எந்த பட்டமும் இல்லை. ஏன் பலரும் பள்ளிப்படிப்பை கூட படிக்கவில்லை. ஆனால், அவர்கள் உயர்ந்து நிற்கவில்லையா? இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இந்த கருத்து குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.