ஆப்கானிஸ்தானில் இருந்து 3,200 பேரை வெளியேற்றியது அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3,200 பேரை அமெரிக்க ராணுவம் வெளியேற்றியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆப்கான் தாலிபான் தீவிரவாதிகளின் வசமாகியிருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு அந்த நாட்டிலேயே தொற்றிக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் பதற்ற நிலை தொடர்வதால் உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கியிருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3,200 பேரை அமெரிக்க ராணுவம் வெளியேற்றியுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். நேற்று மட்டும் 1,100 பேர் காபூலில் இருந்து அமெரிக்கா அழைத்துவரப்பட்டுள்ளதாக ஜோ பைடன் அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. காபூலில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் கொண்டு வருவதற்காக ராணுவத்தின் சி. 17 விமானம் தஜிகிஸ்தானில் உள்ள அயனி விமானப்படை தளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.