பொருளாதார அனர்த்தத்தை மனித பேரழிவாக மாற்ற முயற்சி

06.06.2022 07:34:45

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார அனர்த்தத்தை சிலர் மனித பேரழிவாக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதும், பல்வேறு நாடுகள் உடனடியாக தமது உதவிகளை வழங்கும் என சிலர் கூறினார்கள்.

அவ்வாறான எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. ரஷ்யா விமானம் ஒன்று தடுத்துவைக்கப்பட்டுள்ளமையினால், ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இதுவரையில் காணப்பட்ட நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படும்.

அத்துடன் தேயிலை ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளால் நாடு மேலும் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்க நேரிடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.