உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜுனா!

30.09.2026 08:45:06

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான மதிமுகவின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒருமையில் விமர்சித்திருக்கிறார். பேசத் தெரியாதவன் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவராக உட்கார்ந்து பேசி கொண்டிருக்கிறான் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் மதிமுக இணைந்திருக்கிறது. தவெக உடன் அமைச்சரவையில் இணைய மதிமுக விரும்பிய சூழலில், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற 2 மதிமுக எம்எல்ஏ-க்களும் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர். இந்த நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான மதிமுகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், மதிமுக அழிந்துவிட்டது என்று சொல்பவர்களுக்கு தாராபுரம் தொகுதியில் இருந்து மதிமுக என்றால் என்னவென்று காட்டுவார்கள். வைகோ பேசாத விஷயங்களே இல்லை. அவர் நாடாளுமன்றத்தில் பேசியதை, சட்டசபையில் பேசி இருந்தால் அப்போது ஆட்சி மாற்றம் வந்திருக்கும்.

அதனால் துரை வைகோவிடம் கேட்டுக் கொளோகிறேன்.. போதும் நாடாளுமன்றம்.. அடுத்த தேர்தலில் சட்டசபைக்கு வாருங்கள்.. பேசத் தெரியாதவன் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவராக உட்கார்ந்து கொண்டிருக்கிறான். தயவு செய்து உள்ளே வாருங்கள்.. திமுக எதிர்க்கட்சியாக இருந்து போர் அடித்துவிட்டது. அடுத்த மதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும். தவெகவும், மதிமுகவும் கொள்கையால் இணைந்தோம். இது தேர்தல் கூட்டணி மட்டுமல்ல. இந்த கூட்டணி அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடரும். இந்த கூட்டணியின் முதல் தேர்தலாக தாராபுரம், மதுராந்தகம் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம். திமுக - அதிமுக எதிரும் புதிருமாக இருந்தன.

ஆனால் இப்போது ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, மிதுன் உள்ளிட்ட அனைவரும் இணைந்து திமுக, அதிமுகவை ஒன்றாக்கிவிட்டார்கள். இந்த இடைத்தேர்தல் வெற்றியில் தான் இரு கட்சிகளின் தோல்வியும் தொடங்க போகிறது. சட்டசபையில் ஆபாச நிதி என்று ஒருவர் இருக்கிறார். அவர் பெயரை கூட சொல்ல விரும்பவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர் பேசுகிறார்.

குதிரை பேரம், சோபா மாடல் என்று.. மதிமுக அவமானப்படுத்தப்பட்டாலும் பொறுமையாக இருந்தார்கள். துரை வைகோ தேர்தலுக்கு முன்பே தவெக பக்கம் வர நினைத்தார். துரை வைகோ நினைத்திருந்தால், அமெரிக்காவிலேயே செட்டில் ஆகி இருக்கலாம்.. இவ்வளவு தூரம் வந்து இங்கே கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன? மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது தான் அவரின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.