தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறுவதை மோடி நிறுத்த வேண்டும்

04.01.2023 22:37:58

குடும்ப அட்டை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனே குடும்ப அட்டை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு உடனே செயல்படுத்த வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2021-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பதில் ஏற்பட்ட அளவுக்கு மீறிய தாமதம் காரணமாக, 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் குடும்ப அட்டை இல்லாமல் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு உடனே குடும்ப அட்டை வழங்க வேண்டும். பசியோடு போராடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவைச் செயல்படுத்த மோடி அரசு தவறிவிட்டது.

இந்த உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். வறுமையை ஒழிப்பதற்காக சோனியா காந்தியின் எண்ணத்தில் உதித்த மக்களுக்கு ஆதரவான மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் முதல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் வரை, குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது மோடி எதிர்த்தார்.

ஆனால், பிரதமரானதும் அந்தத் திட்டங்களால் ஆதாயம் தேடிக்கொண்டே, மறுபுறம் ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயம்? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.