புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா?
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மற்றும் அமமுக ஆகிய அணிகளில் இணையாமல் தனித்து பயணித்து வரும் அவர், வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான முதற்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பிரம்மாண்டமான முதல் பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிரூபிக்கவே சசிகலா இந்த தளத்தை தேர்ந்தெடுத்துள்ளார். மறுபுறம், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் தனது அடுத்தகட்ட முடிவை அறிவிக்காத நிலையில், சசிகலாவுடன் அவர் கைகோர்க்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சசிகலாவின் இந்த அதிரடி வரவு, குறிப்பாக தென் தமிழகத்தில் அதிமுக மற்றும் அமமுகவின் வாக்கு வங்கியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தற்போதைய பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.