ஒன்லைன் மூலம் முறைப்பாடுகளை செய்ய வசதிகள்!
ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்கினால் முறைப்பாட்டாளர் இருக்கும் இடத்துக்கு உடனடியாக பொலிஸ் குழுக்களை அனுப்பி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் புதிய முறையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை வார நாட்களில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் , இனிமேல், பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க பொலிஸ் நிலையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது .
இந்த முறைப்பாடுகளை ( TELL IGP ) என்ற பொலிஸ் இணையதளம் ஊடாக வழங்கினால் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் கொழும்பு மாவட்டத்தில் இந்த நடவடிக்கை முதலில் ஆரம்பிக்கப்படுள்ளதுடன் , 22 பொலிஸ் நிலையங்களிலும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த நடவடிக்கையானது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் ஒன்லைன் மூலம் முறைப்பாடுகளை வழங்கினால் முறைப்பாடுகள் முறையாக விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .